சென்னையில் ஆவடி அருகே தடம் புரண்ட ரயில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் சதீஷ் என்பவர் மீது உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் படுகாயமடைந்தார்.
சென்னையில் உள்ள ஆவடி ரயில்நிலையம் அருகே இன்று காலை 5.40 மணிக்கு புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையிலிருந்து செல்லும் சில மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் சதீஷ் என்பவர் மீது உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த சதீஷ் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.