தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. மாஸ்க் அணிய தொண்டர்களுக்கு கட்சிகள் அறிவுறுத்த வேண்டும். தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும். சென்னை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது குறைவாக உள்ளது. கொரோனா உறுதியானால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.