புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு
புதுச்சேரி, ஜன.18 - புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக் கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட நிதி உதவித்தொகை அடுத்த மாதம் முதல் பயனாளிகளுக்கு கிடைக்கும். இத்திட்டத்தை ஜனவரி 22 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி அரசில் கடந்த 2022-2023 பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாத உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசின் வேறு எந்த உதவித் தொகையும் பெறாத (சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள) வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதல்கட்டமாக 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது 75 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆகவும், மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அண்மையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை, ஜன. 18- சென்னையில் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளும் வகையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் காற்றின் தரத்தை கண்காணிக்க தொழில்நுட்பம் அடிப்படை யில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை யில் 15 மண்டலங்களில் 100 இடங்களில் மக்கள் காற்றின் தரம் குறித்து தெரிந்து கொள்ள சென்சார் போர்டுகளை வைத்துள்ளது. பிப்ரவரிக்குள் 100 இடங்க ளில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகை பொருத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. காற்று மாசு என்பது உலகளவில் பொது சுகாதார பிரச்சனையாக இருக்கிறது. காற்று மாசால் மூச்சுத் திணறல், இருதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படு கிறது. சென்னையில் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகிறது. காற்று மாசுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. அதுபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டு மானம், சாலை அமைத்தல், மின் புதைவட பணிகளால் சாலைகள் புழுதிக்காடாக காட்சி அளிக்கிறது சென்னையில் மணலி, தி.நகர், கோயம்பேடு, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதிகள் அதிக மாசுபாடு உள்ள பகுதிகளாக உள்ளது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக தினசரி காற்றின் தரம் மாறுபடுகிறது. இதை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், சென்னையில் முதற்கட்டமாக 75 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறிந்து கொள்ளும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட இருக்கிறது. சோதனை அடிப்படையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வெளியே பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் திட்ட மதிப்பு ரூ.6.36 கோடி ஆகும். போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்படும். இந்த டிஜிட்டல் பலகைகளில் தினசரி காற்றில் உள்ள தூசுகள், நாசகார வாயுக்க ளின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் டிஜிட்டல் பலகைகள் முழுமையாக அமைக்கப்படும். சுற்றுச் சூழலை மாசில்லாமல் பாதுகாப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த டிஜிட்டல் பலகைகள் உதவியாக இருக்கும்.
அதிமுக தேர்தல் அறிக்கை நகைப்புக்குறியது சோசலிஸ்ட் ஜனதா கட்சி விமர்சனம்
சென்னை, ஜன.18- தமிழக தேர்தல் களத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை நகைப்பாக உள்ளது என்று சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 லட்சம் கோடி கடனில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதில் ஆண்களுக்கும் பேருந்து பயணம் இலவசம் என்பது ம், மாதம் தோறும் குடும்பத் தலைவிக்கு 2000 என்பதும் மிகவும் நகைப்புக்குரியதாகும். மது இல்லாத போதைப்பொருள் அற்ற தமிழகம் படைப்போம் என்று வரிகளோ ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்றோ நல்லாட்சி தருவோம் என்றோ கூறாமல் கடன் இல்லா தமிழகத்தை கண்டெடுப்போம் என்று கூறாமல் இப்படியான அறிவிப்புகளை மக்களை ஏமாற்ற கொடுப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்! இதனை சோஷலிஸ்ட் ஜனதா கட்சி கண்டிக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் பஸ் போக்குவரத்து, ஆண், பெண் எல்லோருக்கும் இலவசப் பயணம் என்பது கடன் காரநாட்டில், மேலும், கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
பைக்கில் நிலைதடுமாறி விழுந்த வாலிபர் பலி
அம்பத்தூர், ஜன. 18- குன்றத்தூர் அருகே 200 அடி சாலையில் தடுமாறி விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். உடன் சென்ற தோழி படுகாயம் அடைந்தார். சென்னை மேற்கு மாம்பலம் வாழைத் தோப்பு, எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (21). செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (26). இருவரும் நண்பர்கள். இவர்கள் காணும் பொங்களன்று (ஜன. 17) போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்க்கிருந்து பைக்கில் செங்கல்பட்டு நோக்கி மதுரவாயல் தாம்பரம் 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். தரப்பாக்கம் அருகே சென்ற பைக் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற தோழி திவ்யா படுகாயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிரவின் குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயம் அடைந்த திவ்யாவை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்ணமயமான பொங்கல் கொண்டாட்டம்
சென்னை, ஜன. 18- பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன ஆடை வடிவமைப்பையும் இணைத்து, ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி வணிக வளாகத்தில் உள்ள தனது ஷோரூமில் வண்ணமயமான பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை திரைக்கலைஞர் மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார். வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே அவர் பேசினார். வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பெண்களுக்கான பல்வேறு வகையான ஆடைகளை அறிமுகப்படுத்தினார். பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர்கூறினர்.
வியாசர்பாடியில் இன்று மின்தடை
சென்னை, ஜன. 18- பெரம்பூர் வியாசர்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாசர்பாடி: செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், கேவிடி, தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய காவலர்களை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து
சென்னை, ஜன.18 -
தமிழகத்தில் பொங்கல் திருவிழா கோலா கலமாக கொண்டாடப்பட்ட நிலையில், காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஜன.13 ஆம் தேதி மாடம் பாக்கத்தை அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் போலீசார் நடனம் ஆடிய வீடியோ இன்ஸ்டா கிராமில் பரவியது. இதையடுத்து 2 காவல் நிலையங்களின் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள் பழனிவேல், தயாள், 5 உதவி ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், 20 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தில் நடனம் ஆடிய தற்காக ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார் என ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டதற்கு காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆணை யரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இதை யடுத்து, 2 ஆய்வாளர்கள் தவிர, மற்ற அனை வரும் சனிக்கிழமை பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
பொங்கல் நடனம் ஆடியது தண்டனைக்குரிய குற்றமா? காவல் ஆணையருக்கு வாலிபர் சங்கம் கண்டனம்
சென்னை, ஜன. 18 - தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் நடனமாடியதாக 2 ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கும், நடனத்தை ரசித்த உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 23 காவலர்கள் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜியின் இந்நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டித்துள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தில் நடனம் ஆடியவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது எவ்வகையிலும் நியாயமானது அல்ல. காலப் பணியிடங்களை நிரப்பாததால் பணிச்சுமையில் உள்ளனர். காவலர்களை பணி அழுத்தத்தில் இருந்து விடுவிக்க கலாச்சார நிகழ்வுகளை அரசே நடத்த வேண்டும். உயர் அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும். குற்ற சம்பவங்களை முறையாக விசாரிக்காமல் குற்றமற்றவர்களை தண்டிக்கின்ற காவலர்கள், லஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஜனநாயக அமைப்புகள் போராடினாலும் உயர் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் மிக்க விழாவில் நடனம் ஆடியதை குற்றமாக கருதி எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடவடிக்கை ரத்து இந்நிலையில் காவல்துறை ஆணை யரின் நடவடிக்கையை பல்வேறு தரப்பின ரும் விமர்சித்தனர். இதனையடுத்து ஆயுதப் படைக்கு மாற்றப்பட்ட 23 காவலர்களும் அதே இடத்தில் பணியாற்ற உத்தர விட்டப்பட்டது. இருப்பினும், ஆய்வாளர் கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட வில்லை.