சென்னை,ஆக.30- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், செப்டம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் செப்டம்பர் 1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை யில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது 50 சதவிகித பணியாளர்களு டன் இயங்கும் அரசு அலுவலகங்கள், செப்டம்பர் 1 முதல் 100 சதவீத பணியாளர்களு டன் இயங்கும். வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணி யாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப் படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப் பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15 ஆம் தேதி வரை அனுமதியில்லை.
இதற்குப்பிறகு தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும். பொதுமக்கள் அரசு எடுத்துவரும் முயற்சி களுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்க ளின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப் போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.