tamilnadu

img

பயன்பாடற்ற நிலத்தை நிலமற்றோருக்கு வழங்குக: எம்.சின்னதுரை...

சென்னை:
கந்தவர்கோட்டையில் பயன்பாடற்றிருக்கும் கோவில் நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அரசு பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளியன்று(செப்.3 ) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்களாக்கோவிலில் உள்ள சிவன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுமா? என்று   சின்னதுரை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு,“மண்டல அளவிலான தொல்லியல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநில அளவிலான தொல்லியல் துறை அனுமதிபெற்று மிக விரைவில் திருப்பணியும் குடமுழுக்கும் நடத்தப்படும்” என்றார்.
இந்த கோவில் ஆண்டு ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கிறது. கோவிலில் நிதியில்லை என்றாலும் முதலமைச்சரின் கவனத்துக்கொண்டு சென்று திருப்பணியும், குடமுழுக்கும் நடைபெறும் என்றும் கூறினார்.
துணைக் கேள்வி எழுப்பிய சின்னதுரை, “கந்தவர்கோட்டையில் உள்ள இந்த கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2009 ஆம் ஆண்டில்தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பிறகு, 12 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அந்த கோவிலுக்கு அதிகமாக வருவாய் இருக்கிறது. இருந்தும் குடமுழுக்கு செய்யாதது ஏன்?

“கோவில் கூடாது என்று சொல்லவில்லை. அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது” என்றுதான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அந்த கோவிலுக்கு 100 ஏக்கர் சொந்தமாக இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் வருகிறது என்றால், அந்த நிலத்தை வைத்திருப்பவர்கள் கோவிலுக்கும், அறநிலைய துறைக்கும் பணம் கட்டாமல் இருப்பது ஏன்? எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருக்கும் அந்த நிலத்தை குத்தகை விவசாயம் செய்ய நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்க அரசு முன்வருமா? என்று வினவினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,“ இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நஞ்சையும் இருக்கிறது புஞ்சையும் இருக்கிறது. இதில் 5.81 ஏக்கர் நிலம்தான் விவசாய செய்ய உகந்ததாக இருக்கிறது. இந்த கோவில் நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனடியாக மீட்கப்படும். கோவிலுக்கு வரும் வருமானம் மடைமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதுமீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.