சென்னை:
சட்டப்படியான குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்கக் கோரி பிப்ரவரி புதனன்று சென்னையில்சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இயக்குநர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, சமூக பாதுகாப்புத்திட்ட சிறப்பு ஓய்வூதிய பிரிவில் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வி தகுதியின்றி பணியில் சேர்ந்து முறையாக பணி ஓய்வு பெறாதவர்களுக்கு அரசு 6750 ரூபாய்ஓய்வூதியம் வழங்குகிறது. ஆகவே,சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் 38 ஆண்டுகால பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக 7850 ரூபாய் வழங்க வேண்டுமென்று ஓய்வூதியர்கள் கோரி வருகின்றனர்.இந்நிலையில், சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு பென்சன் என்ற வஞ்சக அரசாணையை மாற்ற வேண்டும், அகவிலைப் படியுடன் சட்டப்படி 7850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுஅனைத்துத்துறை ஓய்வூதிய சங்கமாநில துணைத்தலைவர் குப்பண்ணன் தொடங்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.மாயமலை, பொருளாளர் ஜி.ஆனந்தவள்ளி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து சங்கத்தின்மாநில நிர்வாகிகள், சமூக நலம் மற்றும்சத்துணவு திட்டத்துறை இயக்குநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிர்வாக ரீதியான பிரச்சனைகளை இந்த மாத இறுதிக்குள் முடிப்பதாகவும், பிற கோரிக்கைகள் குறித்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.