tamilnadu

img

பீகார் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை:
பீகார் மின்வாரிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக திங்களன்று (பிப். 3) சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பீகார் மாநில மின்வாரியத்தை பிரிப்பதை எதிர்த்து அம்மாநில மின்ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் தடியடி நடித்தினர். அதனைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், “பொதுத்துறை களை பாதுகாக்க போராடும் ஊழியர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக” கூறினார்.

“மத்திய அரசின் பட்ஜெட்டில், எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்படும்.சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்படும் அனல் மின்நிலையங்கள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் அனைத்து அனுமதிகளை யும் பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. தனியாரை ஊக்குவிக்க பொதுத்துறை அனல் மின் நிலையங்களை மூட முயற்சிக்கின்றனர். இதனால் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இவற்றையெல்லாம் கண்டித்து செவ்வாயன்று (பிப்.4) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.இந்தப்போராட்டத்தில் தி.ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், அருட்செல்வன் (மின்ஊழியர் மத்திய அமைப்பு), சேக்கிழார் (மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம்), சம்பத்குமார் (இன்ஜினியர் சங்கம்), சசிக்குமார் (எல்பிஎப்), ராஜேந்திரன் (ஐஎன்டியுசி), சித்தையன் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), சுப்பிரமணி (எச்எம்எஸ்) உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.