சென்னை:
சிறைக்கைதிகளை உறவினர்கள் 14 ஆம் தேதியில் இருந்து மீண்டும் சிறையில் நேரில்சந்திக்கலாம் என்று சிறைத்துறை தலைமை இயக்குனர் சுனில்குமார் சிங் அறிவித்துள்ளார்.
காவல்துறை தலைவரும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் தலைமை இயக்குனருமான சுனில்குமார் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கொரோனா தொற்று சிறைகளில் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் சிறைக்கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடனான நேர்காணல் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையையும், சிறைக் கைதிகளின் நலனையும் கருத்தில் கொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான நேர்காணலை 14 ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்யப் பட்டுள்ளது.சிறைக்கைதிகளின் நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி, சிறைவாசிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள், e-Prisons Visitors Management Systems அல்லது அந்தந்த சிறைகளுக்கான தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு குறைந்தபட்சம் 24 மணிநேரத்துக்கு முன்னர் முன் பதிவு செய்யவேண்டும். சந்திப்புக்கு ஒதுக்கப் பட்டுள்ள நேரத்துக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறைக்கு வர வேண்டும். நேர்காணலின்போது ஒரு சிறைவாசியை ஒரு பார்வையாளர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவார்.சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட் களை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். மாதத்துக்கு ஒரு குடும்ப நேர்காணல் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தபிறகு பார்வையாளர்கள் முககவசத்துடன் சமூக இடைவெளியைக கடைப்பிடித்து நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவர்.
புழல் மத்திய சிறை (2), கோவை மத்திய சிறை மற்றும் மதுரையில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 150 பார்வையாளர்களும், மற்ற மத்திய சிறைகளில் 100 அல்லது 75 பார்வையாளர்களும், பெண்களுக்கான தனிச்சிறைகளில் 25 பார்வையாளர்களும் நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவர்.மேலும் நேர்காணல் மனுக்கள் பார்வையாளர்கள் அறையின் நுழைவாயிலில் இலவசமாக வழங்கப்படும். நேர்காணலுக்கான முன் பதிவை தொலைபேசி எண்கள் மூலம் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.