சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறை கேட்டிருந்த விவரங் களை வெளியிட வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுத்துவிட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது .இந்த சம்பவத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், ‘பார்’ நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் சரணடைந்தான்.இதில், மணிவண்ணனின் பேஸ்புக் தொடர்புகள், வியாபாரத் தொடர்புகள், திருநாவுக்கரசுடன் இருந்த நட்பு உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த வழக்கில் சிக்காத பலருடைய பெயர்களையும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களும் விரைவில் வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது வாட்ஸ்ஆப் உரையாடல்களை மணிவண்ணன் அழிக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அழித்த உரையாடல்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் தர மறுத்து விட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது. கடந்த மாதம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்களிடம் விவரங்கள் கோரி எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.சமூக ஊடகங்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சைபர் கிரிமினல் வழக்குகளில் தடை ஏற்படுவதாகவும் தமிழக அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. இதனிடையே, போதிய ஒத்துழைப்பு தராத சமூக ஊடகங்கள்இயங்க ஏன் தடை விதிக்கக் கூடாதுஎன்று பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இந்திய தகவல்தொழில்நுட்பப் பிரிவு சட்டத்தின் அடிப்படையில் பல சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவுக்கான சட்டப்பிரதிநிதியை இன்னும் நியமிக்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.