சென்னை:
41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலைப் பணியாளர்களை காவல்துறையினர் கடுமையான முறையில் தாக்கி கைது செய்தனர்.
தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாதஊழியருக்கான ஊதிய விகிதத்தை மாற்றி, 7வது ஊதியக்குழு பலன்களை வழங்க வேண்டும், 10 சதவீதம் ஆபத்துப் படி, நிரந்தரப் பயணப்படி வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது; ஏற்கெனவே வழங்கியசாலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 25அன்று சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்திற்கு கருப்பு உடையணிந்து, குடும்பத்துடன், தொடர் காத்திருப்பு - சங்கொலிப் போராட்டம்நடத்த வந்தவர்களை காவல்துறை யினர் கைது செய்து சின்னமலையில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்திய சாலைப் பணியாளர்கள் நண்பகலில் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று முதன்மை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சங்கத்தின் தலைவர் மா.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் தலைமையில் சென்ற பணியாளர்கள் வாயில் கதவை தள்ளிக்கொண்டு முன்னேறி சென்று இயக்குநர் வளாக வாயிலில் அமர்ந்து முழக்கமிட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை துணை ஆணையர் சேசாங்சாய், ஆய்வாளர் அஜூகுமார் உள்ளிட்டோர் பலப்பிரோயகம் செய்து அப்புறப்படுத்தினர். சங்கத்தின் பொதுச்செயலாளர் அம்சராஜ் உள்ளிட்டோரை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்தனர்.
தீக்கதிர் நிருபர் மீது தாக்குதல்
இந்த போராட்டச் செய்தியை புகைப்படம் எடுத்த தீக்கதிர் செய்தியாளர் எஸ்.கவாஸ்கரின் கேமிராவை ஆய்வாளர் அஜூகுமார் பறித்தார். கேமிராவை பறிகொடுக்க மறுத்த அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு எடுத்துச் சென்றார். உயர் அதிகாரிகள் தலையிட்டதை தொடர்ந்து காவல்துறையினர் கேமிராவை திருப்பிக் கொடுத்தனர். செய்தியாளர் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.