சென்னை, மே 27 -கல்லுகுட்டை பகுதியில் கிணற்றில் தூர்வார இறங்கிய 3 பேர் திங்களன்று (மே 27) பரிதாபமாக உயிரிழந்தனர்.பெருங்குடிக்கு அருகே உள்ள கல்லுகுட்டை உள்ளது. இங்குள்ள சுபாஷ்சந்திரபோஸ் தெருவில் சந்தோஷ் என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் உள்ள கிணற்றில் தூர்வார அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், அன்பு ஆகியோர் திங்களன்று (மே 27) கிணற்றில் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதால் இருவரும் கிணற்றுக்குள் மயங்கி விழுந்தனர். அவர்களை காப்பாற்ற வீட்டின் உரிமையாளர் சுபாஷ் கிணற்றுக்குள் வேகமாக இறங்கினார். அவரும் மயக்கமுற்று விழுந்தார். இவர்களை காப்பாற்ற கிணற்றுக்குள் அடுத்தடுத்து ராஜி, சேகர் ஆகியோரும் இறங்கினர். அவர்கள் இருவரும் மயக்கமுற்று விழுந்தனர். இத்தகவலை அறிந்து வந்த தீயணைப்பு படையினர் இறந்தவர்களின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கமுற்று கிடந்த ராஜி, சேகர் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த 3 பேரும் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், தெருக்கள், கிணறுகளில் தெர்மாகோல், ஜிப்சம்மாவு மற்றும் கட்டிடக் கழிவுகள் பெருமளவில் கொட்டப்படுகிறது; ஒருசில இடங்களில் இத்தகைய கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் நீர்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருவள்ளூவர் தெருவில் இதேபோன்று 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.