தெலங்கானாவில் மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா நலகொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி மண்டல பகுதியில் கோவில் திருவிழாவின்போது தேர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மேலே இருந்த மின் கம்பியில் தேர் உரசியுள்ளது.
இந்த தேர் விபத்தில் மின்சாரம் பாய்ந்து கெத்தபள்ளி கிராம பகுதியை சேர்ந்த ராஜாபைனா யாதய்யா(42), புக் மோனய்யா(43) மற்றும் மக்கபள்ளியை சேர்ந்த கார் ஓட்டுனர் தாசரி அன்ஜி(20) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருவிழாவின்போது இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.