இலவச குடிமனை பட்டா கேட்டு ராயபுரம் எம்எல்ஏ-விடம் மனு
சென்னை, ஜன. 6- இலவச குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதிக்குழு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் 53ஆவது வட்டத்திற்குட்பட்ட போஜராஜன் நகர், சீனிவாசபுரம், 52ஆவது வட்டத்திற்குட்பட்ட ஆடுதொட்டி ஆஞ்சநேய நகர் 1ஆவது தெரு, 6, 6ஏ, 7ஆவது தெருக்கள், கபில கன நாதர் தெரு, சிதம்பரனார் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அளித்த 230 மனுக்களும் அளிக்கப்பட்டன. மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், சீனிவாசபுரம், போஜராஜன் நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிலத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கலெக்டர் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார். ஜனவரி 31க்குள் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மாடல் லைன் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அண்மையில் பட்டா வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்து அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்தனர். இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், ஜாவித் பாஷா, எஸ்.ஆபிதுன்னிசா, என்.ராஜேஷ்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
