tamilnadu

img

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்துக.... துணை முதல்வரிடம் சிபிஎம் தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்.....

சென்னை:
கூவம் கரையோரம் குடியிருந்தமக்களை சென்னை நகருக்குஉள்ளேயே குடியமர்த்த வேண்டும்என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி 55?வது வட்டம் தீவுத்திடல் எதிரில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகிறது. இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த இடத்திலோ அல்லது மூன்று கிலோமீட்டருக்கு அருகாமையிலோ குடியமர்த்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.\

சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்த ஆண்டு வலுக்கட்டாயமாக காவல்துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து போராட்டங்களை  நடத்திய போது, 2019 டிசம்பர்29 அன்று காவல்துறையினரால் கட்சியின் கிளைச்செயலாளர் ஆசைத்தம்பி கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து 2020 நவம்பர் 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கக் கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.இத்தகைய சூழலில் வலுக்கட்டாயமாக அப்பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்திஅம்மக்களின் வாழ்வாதார உரிமை களுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்விளக்கங்கள், உரிய ஆவணங்கள் ஆதாரங்களுடன் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை பரிசீலித்துஉடன் நடவடிக்கை எடுப்பதாகதுணை முதல்வர் உறுதியளித்துள் ளார்.