சென்னை:
அகவிலைப்படியை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி புதனன்று (செப்.8) தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை அகவிலைப்படி வழங்குவதை அதிமுக அரசு நிறுத்தி வைத்து அரசாணை வெளியிட்டது. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, அக விலைப்படி முடக்கத்தை 2022 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. அதாவது 27 மாதங்கள் அகவிலைப் படியை முடக்கியுள்ளது.எனவே, அகவிலைப்படி முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, அரசே ஏற்று நடத்த வேண்டும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீடுதிட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் நெ.இல.சீதரன் கூறியதாவது:
ஓய்வூதியர்களுக்கு கடந்த 20 மாதங்களாக அகவிலைப்படியை வழங்கவில்லை. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 5 வருடமாக வழங்காமல் உள்ளனர்; மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே, இப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இதனிடையே செப்.7 அன்று சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் 13 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அகவிலைப் படியை 2021 ஜனவரியிலிருந்து அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது கூட்டமைப்பின் போராட்ட ஆயத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் தொடர்பான அரசின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து, மின்சார உள்ளிட்ட ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாமல் உள்ளது. சட்டமன்றகூட்டத் தொடர் முடிவதற்குள் முதலமைச்சர்தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.போராட்டத்தில், சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபல் தலைமை வகித்தார். கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் கே.கர்சன், சென்னை மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஏ.முத்துக்குமார், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.