சென்னை:
கரும்புக்கு ரூ.5000 விலை வழங்க வேண்டும். ரூ.1700 கோடி கரும்பு பண பாக்கியைவழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 11 அன்று கரும்பு விவசாயிகள் சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிடுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதாவையும் ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளோடு கரும்பு விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடுவோம்.2020-21 கரும்புக்கு ஒரு டன்னுக்கு (10 சதம் பிழிதிறன்) ரூ.2850 மட்டுமே மத்திய அரசுவிலை அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்புக்கு விலையை உயர்த்தாத மத்திய அரசு தற்போது ஒரு டன் கரும்புக்கு ரூ.100 மட்டுமே விலையை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கரும்புக்கு விலை உயர்த்தப்படவில்லை. மாநில அரசு வழங்கிய ஊக்கத்தொகையும் சேர்த்து நான்கு ஆண்டுகளாக ஒரு டன் கரும்புக்கு ரூ.2750 மட்டுமே தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் பெற்று வருகிறோம்.
முப்பது ஆண்டுகளாக தமிழகத்தில் அமலில் இருந்த கரும்பு பரிந்துரை விலை எஸ்ஏபி-ஐ மாநில அரசு ரத்து செய்துவிட்டு கரும்பு விவசாயிகளுக்கு விரோதமாக, சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமான வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கியுள்ளனர். 2020-21க்கு தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2707.50 தான் விலை வழங்கப்படுகிறது. கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலையை தர மறுக்கும் மத்திய - மாநில அரசுகள், சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு வட்டியில்லாத கடன், ஏற்றுமதி மானியம் என சலுகைகளை வழங்குகிறார்கள்.
தரணி ஆலை ரூ.75 கோடி பாக்கி
தமிழகத்தில் தரணி சர்க்கரை ஆலைகள் 2018-19ல் அரைத்த கரும்புக்கு ரூ.75 கோடி கரும்பு பணப் பாக்கியை மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தரவில்லை. இதனால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை செலுத்த முடியாமல் வட்டி, கூட்டு வட்டி கட்டி சிரமப்படுகிறார்கள். மாற்று பயிர் செய்திடவும் பணமின்றி அவதிப்படுகிறார்கள். மாநில அரசு கையில் அதிகாரம் இருந்தும் கண்டு கொள்ளவில்லை.
அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்துக
தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் உள்ள அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் ரூ.200கோடி கரும்பு பண பாக்கியை வைத்துவிட்டு, விவசாயிகள் பெயரில் ரூ.500 கோடி கடனை வாங்கி ஏமாற்றிவிட்டு ஆலையை மூடிவிட்டார்கள். ஆலை முதலாளி மற்றும் நிர்வாகத்தின் மீது கடலூர் மற்றும் தஞ்சாவூரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை பெற்றுத்தர தமிழக அரசு நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்குபாக்கி பணத்தை அரசே வழங்க வேண்டும்.சட்டப்படி உரிய காலத்தில் கரும்பு பணத்தை சர்க்கரை ஆலைகள் தராததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வெட்டுக்கூலி டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விவசாயிகள் பாதிக்கின்றனர். இத்தகு சூழலில் கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலை கேட்டு, கரும்பு பண பாக்கியை கேட்டு பிப்ரவரி 11 அன்று சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்.
ஒரு டன் கரும்புக்கு (9.5 சதம் ரெக்கவரிக்கு) ரூ.5 ஆயிரம் மத்திய, மாநில அரசுகள் விலை வழங்க வேண்டும். கரும்புக்கு விலையைநிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கியுள்ள மாநில அரசு, அச்சட்டத்தை ரத்துசெய்திட வேண்டும். 2020-21 பருவ கரும்புக்கு மாநில அரசு கரும்பு பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.500 அறிவித்து வழங்கிட வேண்டும்.தரணி சர்க்ரை ஆலைகள் (வாசுதேவ நல்லூர், போளூர், கலையநல்லூர்) தர வேண்டிய2018-19 கரும்பு பண எப்ஆர்பி பாக்கியை 15 சதம்வட்டியுடன் விவசாயிகளுக்கு தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய 2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கான மாநில அரசுஅறிவித்த பரிந்துரை விலை பாக்கி ரூ.1217 கோடியை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.தனியார் சர்க்கரை ஆலைகள் 2003-04/ 2008-09 காலத்திற்கு தர வேண்டிய லாபப்பங்கு தொகை 5ஏ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ரூ.240கோடியை தராமல் உள்ளதை விவசாயிகளுக்கு மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.
திருத்தணி, நேசனல் உட்பட கூட்டுறவு ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியைஉடனடியாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகள்தரவேண்டிய எஸ்.ஏ.பி பாக்கி ரூ.138 கோடியை பிப்ரவரியில் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். திருத்தணி, கே-1 உட்பட கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை புதுப்பித்து மேம்படுத்திட மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் வெட்டுக்கூலியை முறைப்படுத்திட முத்தரப்புக் கூட்டம் நடத்தி மாநில அரசு தீர்வு காண வேண்டும்.அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை மாநில அரசே ஏற்று நடத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கரும்பு பண பாக்கியை மாநில அரசே வழங்கிட வேண்டும். சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் சம்பளப் பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் பிப்ரவரி 11 அன்று காலை நடைபெறும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.