சிபிஎம் ஏற்பாட்டில் பயணிகளுக்கு அமரும் வசதி
ராணிப்பேட்டை, மே 1 – மே தினத்தில் மருதாலம் கூட்டு ரோடு பகுதியில் வியாழனன்று (மே 1) சிபிஎம் மருதாலம் கிளைச் செயலாளர் வ. வேலு தலைமையில் பயணிகள் அமர வசதி செய்துதரப்பட்டுள்ளது. சோளிங்கர் வட்டம், மருதாலம் ஊராட்சி ஒன்றியம், மருதாலம் கூட்ரோடு பகுதியில் தொலைதூர பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல போக்குவரத்து கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயில் பயணிகள் தாகத்தை தணிக்க கடந்த ஏப்.14 அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைத்த நிலையில், பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கை வசதிகள் சிபிஎம் மருதாலம் கிளை சார்பில் செய்யப்பட்டதை வியாழனன்று (மே1) சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.ரமேஷ், ஹரி. கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலவை பள்ளி கட்டிடம் திறப்பு மாணவர் சங்கம் வரவேற்பு
புதுச்சேரி, மே 1- பழமையான கலவை கல்லூரி பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டதை வரவேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாதா கோவில் வீதியில் உள்ள பழமை வாய்ந்த கலவை கல்லூரி பள்ளி கட்டிடம் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இக்கட்டிடம் பழுதானதை தொடர்ந்து புதுச்சேரி அரசு இக்கட்டிடத்தை இடிக்க முற்பட்டபோது, இந்திய மாணவர் சங்கம் தலையிட்டு இப்பள்ளி கட்டிடம் பாரம்பரியம் மிக்கது. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதற்கான போராட்டத்தையும் நடத்தியது. ரூ.5 கோடியில் புனரமைப்பு கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க பொலிவுரு நகர திட்டத்தில் புனரமைக்க ரூ.5 கோடி அரசு ஒதுக்கியது. அதன்படி கட்டிடம் பழமை மாறாமல் அதே வடிவத்தில் புதனன்று (ஏப்.30) திறக்கப்பட்டது. விழாவில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் துணை நிலை ஆளுநர் கைலாஸ்நாதன் திறந்து வைத்தார். பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடும் நிகழ்ச்சி பள்ளி வளாகம் எதிரில் நடைபெற்றது. நிகழ்ச்சி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க புதுவை செயலாளர் சரவணன், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் குமார், வாலிபர்சங்க மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில செயலாளர் சஞ்சய் சேகரன் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
கரை ஒதுங்கிய ராட்சத குழாய்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நெம்மேலி பகுதியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கான மூன்றாவது அலகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடிநீர் குழாய்கள் கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கரை ஒதுங்கியதாக தெரிகிறது. இதனால், சிறிய துடுப்புகளை பயன்படுத்தி படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.