சென்னை;
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 மாவட்டங்களின் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் 30 ஆம் தேதி முடிவடைய உள்ளதால் இவர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் பதவி காலத்தை மேலும் 6 மாதம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்தார். அதில், கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை காரணமாக அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுள்ளது என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கிராம ஊராட்சி மன்றங்கள், ஒன்றியம், மாவட்ட கவுன்சில் ஆகிய 3 அடுக்கு ஊராட்சிகளின் வட்டார எல்லைக்கு உட்பட்ட தொகுதிகளை வரையறை செய்வதற்கான அறிவிப்பையும், முன் ஏற்பாடு பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியவில்லை. இவற்றை செய்து முடித்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அட்டவணை தயாரிக்க முடியும். இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப் படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது ஊரடங்கின் காரணமாக தேர்தலுக்கு முந்தைய பணிகள், வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுதல், வாக்காளர் பட்டியலை தயாரித்தல், வாக்குப்பதிவு அலுவலர்களின் மென் பொருளை உருவாக்குவது ஆகியவற்றை உடனே நிறைவேற்ற இயலவில்லை. ஆகவே, இந்த 9 மாவட்டங்களின் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் 30 ஆம் தேதி முடிவடைய உள்ளதால் இவர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதுபோல், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்கே.என்.நேரு தாக்கல் செய்த மசோதாவில், அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா தாக்கம் காரணமாக இடையூறு இல்லாமல் தேர்தல் நடத்துவதற்கும், அதில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், உகந்த சூழ்நிலையை உறுதி செய்த பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த இயலும். எனவே இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்படுவதாகவும் அமைச்சர் நேரு கூறியிருந்தார்.இந்த இரு மசோதாக்களும் குரல் வாக்குகெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.