தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்-க்கு வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்; முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது.
எஸ்.ஐ.ஆர் என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
                                    