சென்னை:
வேளாண் துறையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடிகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணத்தை சுருட்டிய அதிகாரிகளை தப்பவிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளாண்மைதுறையில் நடைபெற்றுள்ள ஊழல், மோசடி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள்விவசாயிகளுக்கென பல்வேறு நலத்திட்டங் களையும், மானிய உதவிகளையும் வழங்கி வருகிறது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று பல கோடிக்கணக்கான ரூபாய்கள்அமைச்சர், அவரது உறவினர்கள் மற்றும் அதிகாரிகளால் சூறையாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் தான் அதிகமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கண்ட துறைகள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை கண்டறிந்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. போலியான விவசாயிகள், தகுதியற்ற நபர்களுக்கு விதிகளுக்கு புறம்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் பல்வேறு சிரமங்கள், இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகின்றனர். அரசுகளின் உதவிகள் போதுமானது அல்ல என்றாலும் ஓரளவாவது உதவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒன்றிய - மாநில அரசுகள் வழங்கும் உதவிகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் சுருட்டிக்கொள்ளும் அதிகாரிகளை தப்பிக்க விடக்கூடாது.எனவே, வேளாண்மைத்துறையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடிகள் தொடர்பாகசிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசைகேட்டுக் கொள்கிறது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக விவசாயிகளி டம் சென்று சேர்வதை உத்தரவாதப்படுத்த தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.