tamilnadu

img

பரங்கிமலை, பல்லாவரத்தில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில்

சென்னை, ஜூன் 13- பரங்கிமலை, பல்லாவரத்தில் மீட்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் அரசு நிலத்தில், கல்லூரி, சமூக நலக்கூடம், வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் வட்டத்திற்குட்பட்ட புனித தோமையர் மலை கிராமம், கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிராமம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் சுமார் 15 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அண்மையில் வருவாய்த் துறையினரால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடியாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் அரசு அலுவலகங்கள் கட்டவும் மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழனன்று, மீட்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பல்லாவரம் வட்டாட்சியர் டி. ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மீட்கப்பட்ட நிலங்களை பொதுவான திட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த இடங்களில் சமூக நலக்கூடம், வணிக வளாகம், கல்லூரி போன்ற கட்டிடங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.