சென்னை:
தரமற்றமுறையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கே.பி.பார்க் குடியிருப்புகளைப் பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு அருகே கட்டுப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய புதிய குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து கே.பாலகிருஷ்ணன் அந்த குடியிருப்புகளை வியாழனன்று (ஆக. 19) பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சென்னையில் சாதாரண ஏழை, எளிய அன்றாட கூலி வேலை செய்யும் உழைப்பாளி மக்கள் குடிசையிலே வாழக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும், குடிசை இல்லாத மாநகரமாகச் சென்னையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.அந்த அடிப்படையில்தான் கே.பி. பூங்காவிலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1980ஆம் ஆண்டு 280 சதுரடியில் 1,536 குடியிருப்புகள் கட்டப்பட்டு சாதாரண கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த குடியிருப்புகள் பழுதடைந்ததையொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியிருந்தவர்கள் அருகாமையில் தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருபகுதியில் 4 வீடுகளை மட்டும் விசாலமாகக் கட்டியுள்ளனர். ஆனால் பிற பகுதியில் 9 மாடிக்குக் குடியிருப்புகளை நெருக்கமாகக் கட்டியுள்ளனர். சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையை விட இந்த குடியிருப்புகள் சிறிதாக உள்ளன.
கட்டுமானத்தில் ஊழல்
இந்த குடியிருப்பு கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டுமோ அதைவிட 20 விழுக்காடு கூடுதலாக ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 20 விழுக்காடு கூடுதலாக வழங்கியும் இந்த புதிய குடியிருப்புகள் தொட்டாலே காரை காரையாகப் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த மக்கள் இதில் எப்படிக் குடியிருப்பார்கள். ஒரு பலத்த மழை பெய்து கட்டிடம் இடிந்து விழுந்தால் இந்த மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பினார். எல்லாவற்றிலும் ஊழல் செய்த அதிமுக ஆட்சி இந்த ஏழை, எளிய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது இதன்மூலம் தெரிய வருகிறது.
எடப்பாடி சிமெண்ட்
புதிது புதிதாகத் தரமான சிமெண்ட் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கட்டிடங்கள் எடப்பாடியார் சிமெண்டில் கட்டப்பட்டதா என்று தெரியவில்லை. ஏனென்றால் சிமெண்ட் மணலோடு ஒட்டவில்லை, கல்லும் சிமெண்டும் ஒட்டவில்லை. கையை சுவற்றில் வைத்தாலே சிமெண்ட் பெயர்ந்து கொட்டுகிறது.2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த மக்களுக்குக் குடியிருப்புகளை வழங்காமல் தற்போது 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்கள். இந்த குடியிருப்புகள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டதா அல்லது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டதா ? தமிழக அரசு பணம் ஒதுக்கிக் கட்டியிருக்கும் இந்த குடியிருப்புகளைப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏன் இணைக்க வேண்டும். அப்படி இணைத்ததின் விளைவு 1.5 லட்சம் ரூபாய் செலுத்தினால்தான் வீடு வழங்குவோம் எனக் கூறுகிறார்கள்.
பணம் கேட்பது நியாயமா?
இலவசமாக வீடு வழங்குவோம் எனக் கூறித்தானே இம்மக்களை தகரக் கொட்டகையில் அதிமுகஅரசு தங்க வைத்தது. இப்போது பயனாளிகளிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? எந்த நோக்கத்திற்காகக் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினாரோ அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் குடியிருப்புகளைக் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி அதற்குக் காரணமான முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களிடம் பணம் வாங்காமல் வீடுகளை ஒதுக்க வேண்டும். இங்கு 1.5 லட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தி விட்டால், அடுத்து எங்கெல்லாம் குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் கட்டப்படுகிறதோ அங்கெல்லாம் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே அதிமுக அரசு போட்டுள்ள அரசாணையை புதிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
ஆய்வு செய்க!
அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் மூலம் இந்த குடியிருப்புகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இந்த குடியிருப்புகளை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளாக மாற்றி, எங்கெல்லாம் பழுது ஏற்பட்டுள்ளதோ அதைச் சீரமைத்து உடனடியாக பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பராமரிப்பு தொகையும் வசூலிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்வின் போது மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இரா.முரளி, சி.திருவேட்டை, இ.சர்வேசன், கே.முருகன், டி.தனலட்சுமி, பி.சந்திரசேகரன், கிளைச் செயலாளர் சித்தார்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.