சென்னை:
நீட் தேர்வு என்பது பகுத்தறிவிற்கு ஒவ்வாத, அறிவியல் அணுகுமுறைக்கு புறம்பானது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.மயில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள உயர்நிலைக் குழுவிற்குஅளித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிரியர் அமைப்பு. ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்து கடந்த 37 ஆண்டுகளாக இடையறாது செயல்பட்டு வரும் அமைப்பு.அதன் அடிப்படையில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள், சமூகத்தின் அடித்தட்டில் இருக்கக் கூடிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நீட் தேர்வின் தாக்கம் குறித்து கீழ்க்காணும் கருத்துக்களைத் தங்களின் கனிவான பார்வைக்கு எங்களது மாநில அமைப்பு முன்வைக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சமமான கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண் டும். அத்தகு வாய்ப்பு இல்லாத தற்போதைய சூழலில் நீட் தேர்வு என்பது பொருத்தமற்றது.கல்வி என்பது இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு கல்வியை வியாபாரமாக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வியை விலைக்கு வாங்கி அதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பைப் பெற முடியும்.நீட் தேர்வு என்பது சமச்சீரற்ற இச் சமூகத்தில் மேலும் மேலும் சமச்சீரற்ற தன்மையை அதிகரிக்கும். இது தேசத் தின் சீரற்ற வளர்ச்சிக்கு வித்திடும்.
நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடங்களைக் கற்பதில் அக்கறை செலுத்தமாட்டார்கள்.ஏனெனில் அவ்வகுப்புக்களில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதனால் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் அந்த வகுப்புக்குரிய பாடப் பொருள் சார்ந்த அறிவில் முழுமை பெற இயலாத நிலை ஏற்படும். இது கல்வித்தரத்தை வெகுவாகப் பாதிக்கும்.மருத்துவப் பணி என்பது சேவைப் பணி. நீட் தேர்வுக்கான பயிற்சி மையங் களில் சேர்ந்து பல லட்சங்கள் செலவழித்து தேர்ச்சி பெற்று மருத்துவராகும் ஒருவர், தனது சேவைப் பணியை வியாபாரமாக்கும் நிலையே உருவாகும். இது ஏழை மக்களின் மருத்துவத் தேவையை நிறைவேற்றத் தடையாக அமையும்.பல லட்சங்கள் செலவழித்து நீட் பயிற்சி மையங்களில் சேர இயலாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களால் ஒருபோதும் மருத்துவக் கல்வியில் சேர முடியாது என்ற தாழ்வு மனப் பான்மைக்கு உள்ளாவர்.சாதாரணக் குடும்பங்களிலிருந் தும் மருத்துவர்கள் உருவாகும் போது தான், ஏழைகளின் கஷ்ட நஷ்டங் களை முழுமையாக உணர்ந்தவர்கள் மருத்துவப் பணிக்கு வர முடியும். அதற்கு நீட் தேர்வு தடையாக அமைகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களில் கற்பிக்கப்படும் அறிவியல் சார்ந்த பாடங்களே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாகப் பயிலுவதற்குரிய தகுதி மற்றும் திறமைகளை மாணவர்களுக்கு அளிக்க வல்லவை. எனவே, நீட் தேர்வு என்பது தேவையற்றது.நீட் தேர்வு மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக் களில் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது தமிழகத்தில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பொது சுகாதார அமைப்பை வலுவிழக்கச் செய்யும். இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஏராளமாகத் தோன்றி வியாபார நோக்கில் செயல்படும் நிலை ஏற்படும்.இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. அதைச் சீரழிக்கும் செயலை நீட் தேர்வு செய்யும்.கல்வியறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகள் பயிற்சி மையங்களுக்குச் செல்ல இயலாத பொருளாதாரச் சூழல் மற்றும் விடுமுறை நாட்களில் கூட வேறு பணிகளுக்குச் செல்ல வேண்டிய சூழலால் நீட் தேர்வுக்குத் தயாராவது என்பது அவர்களால் இயலாது ஒன்று.
எனவே, 12ஆம் வகுப்பு மதிப் பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் கூட பள்ளியில் கிடைக்கும் கற்றல் வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்விக்குச் செல்ல முடியும்.நீட் தேர்வு பயிற்சி மையங்கள் பெருநகரங்களில் தான் அமையும். அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் என்பது ஒரு ஏழைக் குடும்பத்தால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாததாக இருக் கும். நீட் தேர்வு பயிற்சி என்பதே கிராமப்புற மாணவர்களுக்கு கானல் நீராக அமையும். பிறகு எவ்வாறு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்?
நீட் தேர்வு என்பது பகுத்தறிவிற்கு ஒவ்வாத, அறிவியல் அணுகுமுறைக்கு புறம்பான, மாணவர்களின் விருப்பத்திற்கு மாறான, தேவையற்ற சுமையை மாணவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.மேற்கண்ட எங்களது அமைப்பின் கருத்துக்களை தாங்கள் ஆய்வு செய்து, ஏற்பு செய்து தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்திட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, சமூக நீதிகாத்திட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களை பெரிதும் வேண்டுகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.