சென்னை:
நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட எண்ணற்ற மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை” என்றார்.நீட் தேர்வினால் தற்கொலை செய்த மாணவர்களுக்காகவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் ஸ்டாலின் கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. அடிக்கடி தில்லிக்கு பறக்கும் அமைச்சரும் முதலமைச்சரும் நீர் விவகாரம் குறித்து பிரதமரிடமும் துறை அமைச்சரிடமும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்த வில்லை என்றும் தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தும் பேச அனுமதி கோரியுள்ளோம். பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. ஆனால் 2 நாட்கள் மட்டுமே பேரவை நடக்கிறது. 2 நாட்கள் போதாது என்று எதிர்க்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.