tamilnadu

img

எனது அதிகாரம் உங்களுக்கு கட்டுப்பட்டது... பேரவைத் தலைவர்......

சென்னை:
பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் எதுவும் கிடையாது. எனது அதிகாரம் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு கட்டுப்பட்டது என்று மு. அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவுவை வாழ்த்தி அனைத்து கட்சித் தலைவர்களும் உரையாற்றினர்.தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய பேரவைத்தலைவர் அப்பாவு, “ஒரு குக்கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த நான் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேரவையின் தலைவராக பதவியேற்று இருக்கும் இந்த நாள் என் வாழ் நாளில் மறக்கமுடியாத பொன்னாளாகும்” என்றார்.

சின்ன கட்சி, பெரிய கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறைவு என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்.  சட்டமன்ற மரபு காப்பாற்றப்படும். இன்றே துவங்கிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.சட்டப்பேரவையின் பல மரபுகளும் மாண்புகளும் இழந்துள்ளோம். சிலது காணாமலும் சென்றுள்ளது. அதை அனைத்தையும் மீட்டெடுத்து சிறந்த வழிகாட்டியாக நிற்பேன் கடந்தகாலங்களில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கும் என்றும் பேரவைத் தலைவர் கூறினார்.

நான் சட்டம் படிக்க வில்லை என்றாலும் சட்டப்படி எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் அரவணைத்து முன் மாதிரி சட்டமன்றம் ஆக நிச்சயம் மாற்றி காட்டுவேன்.எனக்கு வழங்கப்பட்டிருப்பது பேரவைத் தலைவர் பதவி அல்ல. பொறுப்பு. பேரவைத் தலைவர் என்றாலே வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று கடந்த காலங்களில் கூறியவர்கள் உண்டு. நான் கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது எனது அதிகாரம் அனைத்தும் இந்த அவையில் உள்ள 234 உறுப்பினர்களுக்கும் கட்டுப்பட்டது என்றும் பேரவைத்தலைவர் அப்பாவும் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை கொண்டு வர வேண்டும். அரசும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.எந்த ஒரு உறுப்பினரும் தங்களை தண்டிக்கவேண்டும் என்ற ஒரு வாய்ப்பை எனக்கு தந்து விட வேண்டாம். கடந்த காலங் களில் அது போன்ற தவறு நடந்தது. அது போன்ற தவறு நடக்கக் கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் பேரவைத் தலைவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.முன்னதாக பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பேசுகையில், “இந்த அவையின் துணைத்தலைவராக அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்திருப்பது பெருமையாக இருக்கிறது. பேரவையின் மரபுகளை காப்பாற்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

பேரவை ஒத்திவைப்பு
இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்றம் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.