tamilnadu

img

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்பு....

சென்னை:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7 வெள்ளியன்று பதவியேற்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மேலும் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து திமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 

ஆளுநரிடம்  உரிமை கோரினார்
இதனைத்தொடர்ந்து மே 4 அன்று 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் திமுக சட்டமன்றக்குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். மே 5 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றனர்.அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சித் தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். ஆட்சிஅமைப்பதற்கான உரிமை கோரினார். இதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

அப்போது அவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தற்கான 133 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை பெற்றுக் கொண்ட ஆளுநர், புதிய ஆட்சி அமைக்க முன்வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்துள்ளார்” என்றுதெரிவித்தார்.ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அழைப்புக் கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராவ் பட்டேல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அந்தக் கடிதத்தில் மே 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் பதவி ஏற்பு நிகழ்ச்சி கிண்டி ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு மிக எளிய முறையில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பதவியேற்றுக்கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவில் பங்கேற்கவரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.