தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவத்துக் கழகத்திற்கு ரூ.90.52 கோடி மதிப்பில் 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் புதன்கிழமை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, ரூ.90.52 கோடி மதிப்பீட்டில் பிஎஸ் 6 இன்ஜின் கொண்ட 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பிஎஸ் 6 இன்ஜின் கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க விதிமுறைகளின்படி, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், முதற்கட்டமாக 150 பிஎஸ் 6 இன்ஜின் கொண்ட புதிய பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற ஏர் சஸ்பென்ஷன் வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி,படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி, ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள், ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலியெழுப்பி, நடத்துநரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலிப்பெருக்கி, பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகாரம், பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக எலக்ட்ரானிக் மேக்னடிக் ரேடர், இன்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபடுத்தி அடக்கும் அமைப்பு கருவி போன்ற சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், மு.சண்முகம், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ்,அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராசன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.