tamilnadu

சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை, பிப். 6- சென்னை மாநகரில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடந்து வருகிறது. இரண்டாவது கட்டமாக மாதவரம் சிறுசேரி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இந்த வழித்தடபாதை ராயப்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக ராயப்பேட்டை ஒயிட்சாலையில் சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஒயிட்சாலையில் அமைக்கப்படும் புதிய மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது. சென்னை வாசிகள் அடிக்கடி செல்லும் இடங்களை இணைக்கும் வகையில் சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல நுழைவு, வெளியேறும் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எளிதில் சத்யம் தியேட்டருக்கு செல்ல முடியும். மேலும் ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் செல்ல இணைப்பு வசதி அமைக்கப்படுகிறது. இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம்.