சென்னை:
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் வெள்ளியன்று ஜூன் 18 பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது.கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த முறையும் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, வெள்ளிக்கிழமை காலை சென்னை கலைவாணர் அரங்கில் ஆய்வு செய்தார்.
10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியும் அவருடன் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை நிகழ்த்த மரபுப்படி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவரும் வந்து நிறைவேற்றித் தருவார் என்றும் தெரிவித்தார்.மேலும் கூட்ட தொடர் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளது என்ற அவர், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என்றும், அதேபோல் பிரதமரையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளதால், விரைவில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஒரு நல்ல முடிவு வரும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப் படி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.