சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவராக மு.அப்பாவு துணைத் தலைவராக கு.பிச்சாண்டி இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 11 சென்னை கலைவாணர் அரங்கில் தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் கூடியது. சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கு வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சித் தரப்பில் மு.அப்பாவு பேரவை தலைவராகவும், கு. பிச்சாண்டி துணை தலைவராகவும் சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். இவர்களது பெயரை மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் முன்மொழிந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிட திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மு.அப்பாவு, மனுதாக்கல் செய்திருந்தார் அதேபோல் தற்காலிக பேரவைத் தலைவர் பிச்சாண்டி துணைத் தலைவருக்கும் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை புதன்கிழமை நடைபெறும் பேரவைக்கூட்டத்தில் தற்காலிக தலைவர் பிச்சாண்டி முறைப்படி அறிவிப்பார்.
பின்னர் பேரவைத் தலைவருக்கான இருக்கையில் மு.அப்பாவு அமருவார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அழைத்துச்சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைப்பர். இந்த மரபினைத் தொடர்ந்து, பேரவை நிகழ்ச்சிகளை மு.அப்பாவு ஏற்று நடத்துவார்.
வாழ்க்கைக் குறிப்பு...
பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் அப்பாவு காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். 1996 ஆம் ஆண்டு தமாகா ஆரம்பிக்கப்பட்டபின்னர் அந்த தேர்தலில் தமாகா சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2011 ஆம் ஆண்டு இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.2016 ஆம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி அந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தீர்ப்பு வரவில்லை.
இந்த நிலையில் தற்போது சட்டசபை பொதுத்தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். இதில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார். துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலைஞர் ஆட்சியில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். சட்டசபைக்கு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.