tamilnadu

img

கொரோனாவிலிருந்து மீண்டார் தோழர்.என்.சங்கரய்யா- மருத்துவ குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.சிகிச்சையளித்த மருத்துவக்குழுவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் பூரண குணமடைந்து இன்று (22.01.2022) வீடு திரும்பினார்.

தோழர் என். சங்கரய்யாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து உத்தரவிட்டதுடன் தொடர்ந்து உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்ததுடன், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் என். சங்கரய்யாவை நேரில் சென்று பார்வையிட்டு உடல் நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர்  ஜெ. ராதாகிருஷ்ணனுக்கும், சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடு செய்த சென்னை, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை டீன் டாக்டர். தேரணிராஜனுக்கும் அவரது தலைமையிலான மருத்துவ குழுவினருக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.