சென்னை:
வேளாண் சார்ந்த பணிகளுக்கான குறைந்த பட்ச கூலியை ரூ.600 ஆக உயர்த்திட வேண்டுமென தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.600 நிர்ணயம் செய்திட வேண்டுமென தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோரிக்கை சம்பந்தமான மனு முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர், வருவாய்த்துறை ஆணையர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர் ஆகியோருக்கு அளிக்கப் பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாகமுதல் நிலை அறிக்கை 14.8.2019ல் வெளியிடப்பட்டது. இதுபற்றி துறையின் இணைய தளத்திலோ அல்லது வேறு வழிகள் மூலமாகவோ வேளாண் தொழிலாளர்களுக்கு அல்லது அவர்களின் அமைப்பிற்கு தெரியப்படுத்தப்படவில்லை. எனவே இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.விவசாய வேலைகள் இயந்திரமயமாகி உள்ளதால் விவசாயத்தில் கிடைக்கும் வேலை நாட்கள் வெகுவாக குறைந்துள்ளன. மறுபுறம் விலைவாசி உயர்வும் அதிகரித்து வருகிறது. எனவே வேளாண் தொழிலாளர்களை பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து காப்பாற்றிடும் வகையில் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.1957 இந்திய தொழிலாளர் மாநாட்டின் வழிகாட்டுதல் மற்றும் 1992ல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்படியும் டாக்டர் அக்ராய்டு குழுவின் பரிந்துரையின்படி 2700 கலோரி பெறும் வகையில், ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு 65.8 மீட்டர் துணி, வீட்டு வாடகை, கல்வி, மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றைச் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.
ஒரு குடும்பம் என்றால், 3.8 யூனிட் என்பது, டாக்டர் அனுப் சத்பதி குழுவின் பரிந்துரை ஆகும்.தற்போது, பெற்றோர்களை பாதுகாப்பது சட்டமாக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்களையும் சேர்த்து (கணவன்-1, மனைவி-1, குழந்தை-2 (1 யூனிட்), பெற்றோர் -1) என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.தமிழ்நாட்டில் கோலப்பன் ஐஏஎஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, வேளாண் தொழிலாளர்கள் வேலை நேரம் ஆண்கள் 6 மணி நேரம், பெண்கள் 5 மணி நேரம் மற்றும் ஊதியம் மணிக்கணக்கில் வழங்க வேண்டுமென்று பரிந்துரை செய்ததை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 1983 ஊதியம் தொடர்பான அரசாணையில் உழவுக்கு வேலை நேரம் 5 மணி நேரம் என வரையறுத்துள்ளது.எனவே வேலை நேரம் கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்ய வேண்டும்:
ஏர் கலப்பை, 2 மாடுகளுடன் 5 மணி நேரம் - ரூ.1000
ஏர்கலப்பை, மாடுகள் இல்லாமல் 5 மணி நேரம் - ரூ.600
நடவு, களை எடுத்தல், 5 மணி நேரம் - ரூ.500
வரப்பு வெட்டுதல், விதை விதைத்தல், மருந்து, உரம் தெளித்தல், கோழி வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மாடு வளர்ப்பு - 6 மணி நேரம் - ரூ.600
அறுவடை - விளைச்சலில் 1/7 பங்கு என அல்லது ரூ.600 என ஊதியம் நிர்ணயம்
செய்ய வேண்டும். மேலும் விலைவாசிப்புள்ளி (கிராமப்புறம்) அடிப்படையில் 6 மாதத்திற்கொருமுறை ஊதிய விகிதம் மாற்றியமைக்க வேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தங்களின் மேலான பரிசீலனைக்கும், பரிவான நடவடிக்கைக்கும் முன்வைக்கிறோம்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையரை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி.மணி, மாநில துணை தலைவர் அ.து.கோதண்டம் ஆகியோர் நவம்பர் 12 செவ்வாயன்று நேரில் சந்தித்து இம்மனுவை அளித்தனர்.