tamilnadu

img

பாலின சமத்துவத்தை முன்னெடுப்போம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு

சென்னை:
மார்ச் 8  உலக மகளிர் தினத்தை முன்னிட்டுபாலின சமத்துவத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒருஉலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிசபாரம்பரியமும் உண்டு. இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தின வாழ்த்துக்களை உலகெங்கிலும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்து போராடும் அத்தனை போராளிகளுக்கும் உரித்தாக்கிக் கொள்கிறது.உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்தும்  மகத்தான போராட்டங்கள் முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன.  இந்தியாவிலும் பொது வேலை நிறுத்தங்கள், விவசாய-விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள், எல்.ஐ.சி.,பி.எஸ்.என்.எல். போன்றவற்றில் நடந்த தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம்/என்.பி.ஆர்./என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள், பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், ஜி.எஸ்.டி., உயர் பணமதிப்பு நீக்கம்,சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார்மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒரு புறம் க்குகின்றன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களாக பெண்கள் உள்ளனர். மேலும் வேலையின்மை, பணிச்சுமை, சமவேலைக்கு சமஊதியமின்மை என பெரும் பகுதிப் பெண்கள் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். மறு புறம், ஒரு நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் கொடுமை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறை 250 சதவீதம் அதிகரிப்பு என்ற நிலைமையும் பெண்கள் மீது பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.  தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிற்காமல் தொடர்கின்றன. அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாற்றுத்திறனாளி பெண்களும் பாதுகாப்பற்றச் சூழலில் தான் வாழ்கின்றனர்.

இணையதளக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சுயமாகக் கருத்து கூறும் பெண்கள் வலைத்தளத்தில் படுமோசமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாதி, மத வெறியர்கள் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவியல்  விரோதபிற்போக்குக் கருத்துக்கள், பெண்ணடிமைத்தனத்தை கெட்டிப்படுத்துகின்றன. சங் பரிவார அமைப்புகள், தலைவர்கள் இதில் தங்கு தடையின்றிப் பங்காற்றுகிறார்கள். பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக முன்வைக்கிறார்கள். அரசியலில் கிரிமினல்மயமும், சமத்துவத்துக்கு எதிரான வலதுசாரி நிலைபாடும் அதிகரித்து வருவது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் கேடாய் மாறி நிற்கிறது. நீதி வழங்கும் இடங்களில் இருப்பவர்களில் ஒரு பகுதி இத்தகைய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையைப் பற்றி நிற்கும் அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதற்கான முயற்சிகள், குறிப்பாகப் பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும். “ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே”  என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான  முயற்சிகளை, போராட்டங்களை   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும். பெண்கள் அமைப்புகளும், தனிநபர்களும் இதற்காக நடத்தும் இயக்கங்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும். சாதி, மதம் கடந்து நின்று, நீதிக்கான போராட்டங்களில் ஈடுபட தமிழகப்பெண்களை, உலகப்பெண்கள் தினத்தன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.