சென்னை:
இந்திய அரசியலமைப்பை பாதுகாத்திட போராடுபவர்களை கிரிமினல் குற்றவாளியாக கருதும் மத்திய அரசை கண்டித்து - நாளை (செப்.16) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கொடூரமான வகுப்புவாத கலவரத்தை ஒட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இயங்கி வரும் தில்லி காவல்துறை அடாவடித்தனமாக அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், கலாச்சார பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மிகுந்தஅதிர்ச்சி அளிக்கிறது. பழிவாங்கும் நோக்குடன், மிகவும் பாரபட்சமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் அனைத்தையும் ஆழமாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து நடத்தினார்கள் என பாஜக, ஆர்எஸ்எஸ் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் பேரா. ஜெயதி கோஷ், தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், சுயாட்சி அதிகாரம் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ஆவணப் படத்தயாரிப்பாளர் ராகுல் ராய் ஆகியோர் இதன் பின்னணியில் இருந்து போராட்டக்காரர்களை தூண்டிவிட்டதாக தில்லி காவல்துறை தற்போது பழி சுமத்துகிறது.
குற்றப்பத்திரிகையில்...
தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில் (FIR 50/20) மக்களுக்காக போராடும், எழுதும் இந்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபகாலமாக, பிரதான எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக சித்தரிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு முகமைமற்றும் அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளை பயன்படுத்துவதுடன் காவல்துறையை துஷ்பிரயோகம் செய்கிறது மத்திய பாஜக அரசு. தேசிய பாதுகாப்பு சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசத் துரோக சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களை தீவிரமாக எதிர்ப்பவர்கள் மீது (அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு மாறாக) இந்த கொடூர சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படு கின்றன.
பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வுமுகமை ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட விதம் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்குசான்றாக உள்ளது. அதேபோல் டாக்டர் கஃபீல் கான் அவர்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறி ஜாமீன் வழங்கியது பாஜக அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுகிறது .ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதலாகும். அமைதியான முறையில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரித்து தங்கள் அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கேற்ப தில்லி காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், இத்தகைய பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது
கண்டனம் முழங்குக!
ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் இத்தகைய கோழைத்தனமான தாக்குதலை கண்டித்து கட்சி அணிகள், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அக்கறையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தனிநபர்களும் எதிர்ப்புக்குரல் தெரிவிக்க வேண்டுமெனவும் இந்த அநீதிக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து 2020 செப்டம்பர் 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகள் பெருமளவில் கலந்துகொள்ள அறைகூவி அழைப்பதுடன், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் சிபிஐ(எம்) கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.