பகத்சிங்கின் புரட்சிப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்! மதுரையில் நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா எழுச்சி!
மதுரை, பிப்.23 - “இந்தியாவின் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது சுரண்டலற்ற சோசலிச சமூக மாற்றமாக இருக்க வேண்டும் என்ற பகத்சிங்கின் கனவை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று மதுரையில் நடைபெற்ற நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் தலைவர்கள் முழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு மற்றும் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில், மாவீரன் பகத்சிங் உருவாக்கிய ‘நவஜவான் பாரத் சபா’ அமைப்பின் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பெத்தானியா புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில், அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான பல்வேறு முக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. மன்னிப்புக் கடிதங்களின் வரலாறு நமக்குத் தேவையில்லை: ஏ.ஏ.ரஹீம் எம்.பி., வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி சிறப்புரையாற்றுகையில், “இன்று நாம் எதிர்கொள்வது வேறொரு வடிவத் திலான ஏகாதிபத்திய ஆதிக்கம். நாட்டின் இறையாண்மை குறித்த முடி வுகள் வெளிநாட்டு அதிகார மையங் களால் தீர்மானிக்கப்படும் அவலம் நிலவுகிறது. பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் போன்ற மாவீரர்களின் வரலாறு என்பது மன்னிப்புக் கடிதங்களின் வரலாறு அல்ல; அது போராடி உயிர் தியாகம் செய்த வீர வரலாறு” என்றார். மேலும், இன்றைய இளைஞர்கள் இஎம்ஐ (EMI), சிபில் ஸ்கோர் (CIBIL) போன்ற பொருளாதாரச் சுழலில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “வேலைகள் ஒப்பந்தமயமாக்கல் அதிகரிப்பது சமூக நீதிக்கு எதிரா னது. அக்னிவீர் போன்ற திட்டங்கள் நிரந்தரப் பணிகளை அழித்து, இட ஒதுக்கீட்டை அர்த்தமற்றதாக்குகின்றன. சாதி-மத வெறிக்கு எதிராக ‘ஒன்றே சாதி, ஒன்றே மதம் - அது மனித சாதி’ என்ற முழக்கத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும்” என அறைகூவல் விடுத்தார். அறிவியலைச் சிதைக்கும் பிற்போக்குத்தனம்: ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகை யில், “பகத்சிங் இளைஞர்களைச் சோச லிசப் பாதையில் ஒன்றிணைத்தார். ஆனால் இன்று மத்தியிலுள்ள பாஜக அரசு, கல்வித் துறையில் அறிவிய லுக்குப் புறம்பான மூடநம்பிக்கை களைப் புகுத்தி வருகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பழங்காலத்திலேயே இருந்ததாகக் கூறுவதும், வரலாற்றைத் திரிப்பதும் வளர்ச்சியைப் பின் னோக்கித் தள்ளும் செயல்கள். விலை வாசி உயர்வு, வேலையின்மை போன்ற உண்மைப் பிரச்சினைகளைப் பேசாமல், மத உணர்ச்சிகளைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை நாம் முறியடிக்க வேண்டும்” என்றார். சோசலிச இந்தியாவே நமது இலக்கு: எஸ்.கார்த்திக் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் பேசுகையில், “1926-ல் தொடங்கப்பட்ட நவஜவான் பாரத் சபா, இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன்முதலில் உரக்கச் சொன் னது. 1925-ல் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பகத்சிங்கின் வாரிசுகளான நாம், ‘பாலுக்கு அழும் குழந்தை, வேலைக்காக ஏங்கும் மாணவன் இல்லாத’ இந்தியாவை உருவாக்கப் போராடுகிறோம். கல்வி மற்றும் வேலையை அடிப்படை உரிமை யாக்க வாலிபர் சங்கம் தனது போராட் டத்தைத் தொடரும்” எனத் தெரிவித்தார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்பு முன்னதாக, மாநிலத் துணைத் தலைவர் டி. செல்வா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் தலைவர் ஏ.சி. அனந்தன் மற்றும் விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பா ளர் பால்ச்சாமி ஆகியோர் கௌர விக்கப்பட்டனர். சுடர் தப்பட்டாக் குழுவின் கலை நிகழ்ச்சிகள், வாலிபர் சங்க சிலம்பப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் புரட்சிகரப் பாடல் கள் மாநாட்டிற்கு எழுச்சியூட்டின. மதுரை புறநகர், சிவகங்கை, விருது நகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா நன்றி கூறினார். (ந.நி)
