சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த ஆ.ராசா அதன்பிறகு தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்தார். ஏற்கனவே சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பு கொடுக்காததால், இறுதியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் சிகிச்சையில் இருக்கும் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார்.இந்நிலையில், பரமேஸ்வரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், சனிக்கிழமையன்று (மே 29) இரவு 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மறைந்த பரமேஸ்வரியின் உடலுக்கு திமுக நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் இரங்கல்
பரமேஸ்வரியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங் கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் திருமதி. பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் – தாழ்விலும், நெருக்கடிகளிலும் – சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற் றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி.அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”எத்தனை சோதனைகளும் வேதனைகளும் அழிவழக்குகளும் வந்து தொல்லைகளை அனுபவிக்கும் போதெல் லாம் துணிவுடன் அவருக்கு துணைவியாய், ஆறுதலாய், தேறுதலாய் இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவியார்” என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கையில், ”திராவிட இயக்கத்தின் ஈடற்ற தளகர்த்தராக ஆ.இராசா பொது வாழ்வில் சிகரங்களை எட்டுவதற்கு காரணமாக இருந்த இணையரை இழந்து இருக்கிறார். தோன்றாத் துணையாக இருந்த அவரது வாழ்விணையர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு”எனக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, இரா.முத்தரசன், தொல் திருமாவளவன், ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.