tamilnadu

img

கே.டி.ராகவன் பாலியல் பிரச்சனை... தமிழக மகளிர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.... ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
பாலியல் ஆபாச வீடியோவிவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்து புகார் கொடுக்க முன்வருபவர்கள் அனைத்திந்தி ஜனநாயக மாதர் சங்கத்தை அணுகலாம் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்  கே.டி.ராகவன் குறித்து வெளிவந்த வீடியோ பதிவு தமிழகம் முழுவதிலும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.   இது தனிப்பட்ட இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது குறித்த ஒரு கருத்தும் உள்ளது.  இது இரு தனி நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை என வைத்துக்கொண்டாலும்,  இது பொது விவாதத்துக்கு வந்து விட்ட பின்னணியில், ஒரு அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்  தனிப்பட்ட முறையிலும் கூட சமூகத்திற்கு ஒரு நல்ல  முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 

ராகவன் குறித்த சர்ச்சை எத்தகைய சூழலில் எழுகிறது என பார்க்க வேண்டும். அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அம்மாவட்டத்தின் மகளிரணி செயலாளரை தன் அதிகாரத்தை பயன்படுத்தி சில உத்தரவாதங்களை கொடுத்து பாலியல் ரீதியாக அவரை பயன்படுத்தியிருக்கிறார் .பின்னாளில் அப்பெண் கைவிடப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமைக்கு ஒரு புகார் மனு அனுப்பியும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் பாஜக மேலிடம்  எடுக்கவில்லை.  பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலர் பெண்களை இதுபோன்று தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்வதும், வல்லுறவில் ஈடுபடுவதும், பாலியல் ரீதியாக  பயன்படுத்திக் கொள்வதும்  தொடர்கிறது.இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்க பெண்கள் யாரும் முன்வருவது கிடையாது. ஏனெனில் அவர்களது அரசியல் செல்வாக்கை எதிர்த்து பெண்களால் வெளியே வந்து இப்படிப்பட்ட பிரச்சனைகளை சொல்ல முடிவதில்லை.

எனவே இத்தகைய செயல்பாடுகள் பெண்கள் அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் வருவதற்கு பெரும் தடையாக அமைந்து விடுகின்றன. கே.டி.ராகவன் தன் அரசியல் அதிகாரத்தை, கட்சி பொறுப்பின் செல்வாக்கை பயன்படுத்தி பெண்களின் விருப்பத்திற்கு மாறாக  பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருந்தால் அது குற்றம். எனவே என்ன  நடந்தது என காவல்துறை  உரியமுறையில்  விசாரித்திட வேண்டும். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தமிழக மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து தலையிட்டு, இத்தகைய நிகழ்வுகளால்  பெண்களின் பொதுவாழ்க்கைக்கு எந்த குந்தகமும் விளையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு  கேட்டுக் கொள்கிறது.  பிரச்சனைகள் குறித்து புகார் கொடுக்க முன் வருபவர்கள் ஜனநாயக மாதர் சங்கத்தையும் அணுகலாம்.