சென்னை:
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பது பொருத்தமற்றது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதன் விளைவாக தற்போது பல மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவது ஆறுதலளிக்கிறது. ஆனாலும் முழுமையாக நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றும் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது; அதுமிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அறிவியல்பூர்வமான தகவல்கள் வெளிவருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சென்ற ஆண்டு 2020 மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார ரீதியாக மீளமுடியாமல் இன்றளவும் சாதாரணஏழை, எளிய மக்கள் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
இச்சூழலில் தற்போது தமிழக அரசு மதுபான டைகளை திறந்திருப்பது பொருத்தமற்றது.இது சாமானிய மக்களின் குடும்பங்களில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குடும்ப வன்முறைகளும் அதிகரிக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்து நிரந்தரமாக மூடிவிடுவோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் வாக்குறுதி கண்டு தமிழக பெண் வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்புள்ள சூழலில் தமிழக அரசு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதிப்படி படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து முழுமையாக மதுபான கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் .இது தமிழகபெண்களுக்கு செய்யும் உதவியாகஇருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.