tamilnadu

திரைக் கலைஞர் சூர்யாவை மிரட்டுவதா? பாஜகவுக்கு சிபிஎம் கடும் கண்டனம்...

சென்னை:
திரைப்பட கலைஞர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றி கருத்துரிமைக்கு எதிராக மிரட்டல் விடுத்திருப்பதை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாககண்டித்துள்ளது. இதுதொடர் பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாகபடைப்பாளிகள் மீதும், திரைப் படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்துதெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் இத்தகையதொரு மிக மோசமான சட்டத்திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட திரையுலகினர் ஒன்றிணைந்த கடிதம் வாயிலாகவும் இக்கோரிக் கையை ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ளனர். தணிக்கை குறித்தஆட்சேபணை இருந்தால் படைப்பாளிகள் மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவை தன்னிச்சையாக கலைத்துவிட்டு, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசே சூப்பர்தணிக்கைக்குழுவாக செயல்பட்டு அவர்களது சித்தாந்தத்திற் கும், அரசியலுக்கும் ஒவ்வாததிரைப்படங்களை வெளியிடவிடாமல் தடுக்கும் பாசிச நோக் கம் இதில் உள்ளடங்கியுள்ளது. ஏற்கனவே ஊடக சுதந்திரம் குறித்த தரப்பட்டியலில் 180 உலகநாடுகளில் இந்தியா 142வது இடத்தில் இருக்கிறது.

இப்பின்னணியில் தமிழக திரைக்கலைஞர் சூர்யா அவர்களும், “சட்டம் என்பது கருத்துசுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல் லாது, அதன் குரல் வளையை நெரிப்பதாக இருக்கக் கூடாது” என தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஜனநாயக ரீதியாக தனது கருத்தைசமூக ஊடகத்தின் வாயிலாக பதிவுசெய்த திரைக் கலைஞர் சூர்யாவிற்கு, பாஜக இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

எனவே அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ள எந்தவொரு உரிமையின் மீதும் யாரும் கைவைக்க அனுமதிக்க முடியாது என்பதோடு, பாஜகவின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை கண்டிக்கவும், மேற்கூறிய சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாலிபர் சங்கம் கண்டனம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:நீட் தேர்வுக்கு எதிராக நியாயமான, ஜனநாயக முறையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பாரதிய ஜனதா கட்சியினுடைய தமிழ்நாடு இளைஞர் அணி, திரைப்படக் கலைஞர் சூர்யா அவர்களும், தமிழக அரசும் நீட் தேர்வு குறித்து குழப் பத்தை ஏற்படுத்துவதாக கூறி அவதூறாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துகுரல் எழுப்பி வரும் நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள குழுவே தவறென்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட அரசாணைக்கு தடை விதித்து அதனை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு பாஜகபொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதன் மூலம் தமிழக மக்களுக்கும் எதிர்கால மருத்துவர்களாக வரவிருக்கிற மாணவர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை பாஜக இழைத்திருக்கிறது.ஜனநாயக உரிமையை பறிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது. எத்தகைய வடிவத்தில் அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வோம். சமூக அக்கறை உள்ளவர்கள் அனைவரும்தங்களது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.