மும்பை:
நாராயண் ரானே போன்றவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தால், அதற் காக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாஜக-வுக்கு சிவசேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தனது ‘சாம்னா’ பத்திரிகையில் சிவசேனா கூறியிருப்பதாவது:
ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே தனது பேச்சுகள் மூலம் ஒன்றிய அரசை தலைகுனிய வைத்துள்ளார். பிரதமர்மோடியும், அமித் ஷாவும் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்தநாராயண் ரானேவின் பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.யாராவது பிரதமரை பற்றிஇப்படி பேசியிருந்தால் அவர்மீது தேசத்துரோக குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கும். நாராயண் ரானேவின் குற்றமும் அதுபோன்றது தான்.மகாராஷ்டிரம் சட்டப்படி இயங்கும் மாநிலம். இதுபோன்ற செயல்களை குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை பிரதமர் மோடி சகித்துக்கொள்ள மாட் டார். பாஜக இதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்.
நாராயண் ரானே ஓட்டைகளுடன் கூடிய பலூன். பாஜகஎவ்வளவு காற்றை நிரப்ப முயன்றாலும் அது ஒருபோதும் பெரிதாகாது. ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோதும் அவர் சாலையோர ரவுடி போலநடந்துகொண்டு வருகிறார். பாஜகவின் மாநிலத் தலைவர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்டோர் ரானேவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். எந்த ஒரு பண்பட்ட தலைவரும் மன்னிப்புக் கேட்டு இந்தவிவகாரத்தை முடித்திருப் பார். ஏனெனில் மாநிலத் திற்கு மேல் யாரும் இல்லை.ஆனால் பாஜகவைப் பொறுத்த வரை, மகாராஷ்டிரத்தின் பெருமை மற்றும் முதல்வரின் கவுரவம் முக்கியமற்றதாகி விட்டது.இவ்வாறு சாம்னா குறிப் பிட்டுள்ளது.