சென்னை:
வேலைநேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மே 10 அன்று வீடுகள் முன் உரிமை முழக்கம் எழுப்புவோம் என்று சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பெரும் போராட்டத்திற்கு பின் உலகளாவியஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 மணி நேர வேலையை கொரோனா தொற்று நோயைபயன்படுத்தி பறிக்கப்பார்க்கிறது. இன்றைய உற்பத்தி உலகில் இயந்திரமயமாக்கப்பட்டபின் தானியங்கி இயந்திரங்களுக்கு இணையாக மனிதர்கள் உழைத்தாக வேண்டியுள்ளது.
விஞ்ஞான ரீதியாக இது கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை பல ஆய்வுகள் உணர்த்தியுள்ளது. இதன்காரணமாக சர்வதேசதொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) வேலை நேரத்தை 6 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் வலியுறுத்து கிறது. இச் சூழலில் விஞ்ஞான ரீதியாக 6 மணிநேரமாக மாற்றுவதற்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை லாபத்திற்குவழிவகுக்கின்ற முதலாளிகளின் விருப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
மேலும் தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த தொகையான ஈஎஸ்ஐ, பிஎப். போன்ற பணத்தை முதலாளிகளுக்கு கொடுக்க உத்தேசித்துள்ளதை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை வேறுயாருக்கும் கொடுப்பதையோ, அதிலிருந்து எடுப்பதையோ அனுமதியோம். கொரோனா பெரும் தொற்றைப் பயன்படுத்தி பிஎம்கேர் நிதிக்கு பல கோடிகள் வந்துள்ளன. அதைத்தான் மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமேயன்றி தொழிலாளர் களின் சேமிப்பையல்ல என்பதை ஆட்சி யாளர்கள் உணரவேண்டும்.கொரோனா பெரும் தொற்றின் காரணமாககடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு நாடு முழு வதும் அமலாக்கப்பட்டது. இதன் விளைவு ஆலைகள் அனைத்தும் உற்பத்தியை நிறுத்தியது. சேவை நிறுவனங்களின் வேலைகள்நின்றது. அரசு பொது போக்குவரத்தை நிறுத்தியது. கடைகள் அடைக்கப்பட்டன. எல்லாம் கொரோனா தொற்று பரவிவிடக்கூடாது என்பதற்காகவே. விளைவு அனைத்துத்துறையிலும் வேலை இழப்பு, வருமான இழப்பை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் விளைப் பொருட்களை விற்க முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.
கடுமையான பொருளாதார சிரமங்களை அனைவரும் சந்தித்து வருகின்றனர். மத்திய,மாநில அரசுகள் கடந்த 3 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கை ஓரளவு தளர்த்தியது. தொழிலாளர்களின் இழப்பை ஈடுசெய்ய அரசு முறையான உருப்படியான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசுகள் வாரி இறைக்கின்றன. இவைகள் போதாது என இப்போது உற்பத்தியாளர்கள் அமைப்புகள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். குறிப்பாக 8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்பது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 12 மணிநேரமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவே வரும் 10 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரை தங்களது வீடுகளின் முன் செங்கொடியுடன், கோரிக்கை அட்டைகளுடன் உரிமை முழக்கத்தை எழுப்புவோம். தமிழகத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் அமலாக்க அனுமதியோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.