tamilnadu

img

கடலில் மீனவர்களுக்கு உதவ நவீன தொழில்நுட்ப கருவி அறிமுகம்....

சென்னை:
கடலுக்குள் மீன்பிடிக்க படகுகளில் செல்லும் மீனவர்களுக்கு புயல் மற்றும் அவசர கால இடர்பாடுகளில் உதவுவதற்காக ‘ஸ்கைலோ டெக்னாலஜிஸ்’ என்ற இந்திய நிறுவனம், ‘ஸ்கைலோ ஹப்’ என்ற புதிய மின்னணு தொழில்நுட்ப சாதனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீனவர் நலத்திட்ட இயக்குனர் கணேஷ் நாக்காவா கூறியதாவது:-‘ஸ்கைலோ ஹப்’ சாதனத்தை மீனவர்கள் படகில் நிறுவினால் போதும். இதில் உள்ள நுண்ணலை கதிர் மூலம் மீனவர்கள் அனுப்பும் தகவல் கரையில் இருப்பவர்களுக்கு வந்து சேரும். தரை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து படகுகளுக்கு அனுப்பப்படும் அவசர தகவல்களும் மீனவர்களை உடனடியாக சென்றடையும்.

பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்த பழமையான அணுகுமுறையையே தொடர்ந்து கையாண்டால் மீனவர்கள் வாழ்க்கைத்தரம் சிறக்காது. எனவே உலகிலேயே முதல்முறையாக குறுகிய அலைநீளம் கொண்ட நுண்ணலை அடிப்படையிலான இணையத் தொடர்பு மூலம் எந்திரங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளோம். இது நம்பகமானவை, செலவு குறைந்தவை. எனவே இதனை தமிழ் நாட்டில் 600 மீனவ கிராமங்களில் வசிக்கும் 10 லட்சம் மீனவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் 7 மீனவர்கள் கடலில் தத்தளித்தபோது, அவர்களை உயிரோடு மீட்ட நிகழ்வில் ‘ஸ்கைலோ’ தொழில்நுட்பம் தனது திறனை நிரூபித்து இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.