சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் மனிதத் தன்மையற்ற வசூல் வேட்டையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒட்டுமொத்த தேசமே முடங்கிக் கிடக்கிறது. மக்கள் வாழ வழியின்றி அல்லல்பட்டு வேதனையில் உழன்று வரும் சூழலில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகமும், துணை வேந்தரும் மனித தன்மையற்ற ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தங்கள் செமஸ்டர் கட்டணத்தை கட்டாயம் கட்ட வேண்டும். கட்டணம் கட்ட தவறும் மாணவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணை நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கிவிடுவோம் என்பதே அவ்வறிவிப்பாகும்.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி எந்தவொரு மாணவரிடமும் கடந்த கல்வியாண்டின் கட்டணத்தையோ அல்லது நடப்பு கல்வியாண்டின் கட்டணத்தையோ கேட்டு வற்புறுத்தக் கூடாது. அவ்வாறு எந்தவொரு நிர்வாகம் வற்புறுத்தினாலும் புகார் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமே கடந்த ஏப்ரல் 22ல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றமும் இதே போன்ற கருத்தை தனியார் பள்ளிகளுக்கும் தெரிவித்துள்ளது. ஆனால் துணைவேந்தர் சூரப்பாவின் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், தனியார் பொறியியல் கல்லூரியின் கல்லாவை நிரப்ப இந்த அடாவடித்தனமான முடிவை எடுத்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் எந்தவொரு மாணவரும் கல்லூரியின் நூலகம், ஆய்வகம், கணினி மையம், பேருந்து, விளையாட்டு மைதானம் என எந்தவொரு வசதியையும் பயன்படுத்தாத நிலையில், மேலும் டிசம்பர் வரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்பதும் தெளிவாக தெரியவந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தனியார் முதலாளிகளின் வருவாயை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
எனவே தமிழக மாணவர்களும், இந்திய மாணவர் சங்கமும் ஒரு போதும் இந்நடவடிக்கையை அனுமதிக்கமாட்டோம். மேலும் இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கொரோனா பெருந்தொற்று முடியும் வரை எந்தவொரு கட்டணத்தையும் மாணவர்களிடம் கேட்டு துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.