சென்னை:
விவசாயிகளுக்கான புயல் நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை தாமதமில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நவம்பர் மாதம் தமிழகத்தில் வீசிய நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக நெல், வாழை,மணிலா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் அழிந்தும் கால்நடைகள் உயிரிழந்தும், பல இடங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டும் மக்கள்சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகினர்.மிகுந்த காலதாமதமாக தமிழக அரசு 2 ஆம்தேதி நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இடுபொருள் நிவாரணம் என்கிற பெயரில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்று அறிவித்திருப்பது மிகக் குறைவான தொகையாகும். அனைத்து விவசாய சங்கங்களும் நெல் பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்திருந்தது. ஆனால், உற்பத்தி செலவில்பாதியை கூட அரசு நிவாரணமாக வழங்க வில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.குடிசைகள் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவற்றிற்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு இத்தகையபாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.தமிழக அரசு புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக மத்திய அரசிடம் 5264.38 கோடி கோரியுள்ளது. கடந்த காலங்களில் மாநில அரசு கோரிய தொகையில் மிகச் சொற்பமான தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய போக்கை கைவிட்டு தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை தாமதமில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.