சென்னை,பிப்.5- நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் புதனன்று விசாரணை மேற்கொண்டனர். நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் விஜய்யிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய்யை அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அன்புச்செழியன் வீட்டில் சோதனை
வரி ஏய்ப்பு புகாரில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் புதனன்று சோதனை நடத்தினர். இவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க பைனான்சியராகவும் இருந்துள்ளார்.