tamilnadu

img

கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி வாலிபர் பலி

சென்னை, நவ. 12- சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கீழ்தளத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்தார். சென்னை ஐஸ்அவுஸ் அனுமந்த புரம் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு அருண்குமார் (25), மற்றும் ரஞ்சித்குமார்(23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். அதே நேரம் ஓய்வு நேரங்களில் பல இடங்களில் கூலி வேலையும் செய்து வந்தனர். ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபானி என்பவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். அதன்படி அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். கழிவுநீர் தொட்டியில் இறங்கி ரஞ்சித்குமார் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது திடீரென விஷவாயு தாக்கியது. இதில் ரஞ்சித் குமார் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் அருண்குமார் கழிவுநீர் தொட்டி யில் இறங்கி தம்பி ரஞ்சித்குமாரை தூக்கி வெளியில் விட்டார்.  ஆனால் அருண்குமாரையும் விஷவாயு தாக்கியதால் தொட்டியில் இருந்து அவரால் வெளியே வர இயலவில்லை. இதில் கழிவுநீர் தொட்டியிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக பலியானார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை காவல் துறையினர் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததா? கவனக்குறைவாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிபிஎம்
இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் எம். தாமு உள்ளிட்டோர் தலையிட்டதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் ரூ. 7 லட்சம் ஒப்பந்ததாரர் 3 லட்ச ரூபாயும் நிவாரணமாக தர ஒப்புக் கொண்டனர்.
நட்ட ஈடு
1993 ஆம் ஆண்டே கையால் மலம் அள்ளுவதையும், பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருந்தும் தொடர்ந்து இத்தகைய மனித மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இறந்த வாலிபனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நட்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், சம்பந்தப்பட்ட நபர்களை உரிய விசாரணை நடத்தி கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோதமாக எற்பாடு செய்த ஏஜென்சியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.