சென்னை:
புதிய தேசியக் கல்விக்கொள்கையை ஆராய்வதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் மாணவர் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களை இணைத்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர் கல்வித் துறையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப் படுத்த வாய்ப்புள்ள கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தர, தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில் தற்போதைய துணைவேந்தர்கள் நான்கு பேரும், முன்னாள் துணை வேந்தர்கள் இருவர் என ஆறு துணைவேந்தர் நிலையில் உள்ள கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ள இக் குழுவிற்கு உயர் கல்வித் துறை செயலாளர் தலைவராக இருப்பார் என்று அரசாணை தெரிவிக்கிறது.இது மரபை மீறும் செயல். துணைவேந்தர் நிலையில் இருக்கும் கல்வியாளர்களைக் கொண்ட குழுவிற்குத் துணைவேந்தர் நிலையில் இருப்பவர் தலைவராக இருப்பதும், துறைச் செயலாளர் உறுப்பினர்- செயலராக இருப்பதும்தான் நியாயமான அணுகுமுறை. இக்குழு ஆசிரியர் பிரதிநிதிகளையும், மாணவர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விரிந்த குழுவாக மாற்றி அமைக்கவேண்டும்.மேலும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழு, பொது மக்கள், ஆசிரியர், மாணவர் அமைப்புகள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் கருத்தையும் அறிந்து அதன்பின்னர் தங்களது அறிக்கையை இறுதி செய்யும் வகையில் குழுவின்தொடர்பு முகவரியைத் தெரிவிக்கவேண்டும்.தமிழ்ச்சமூகத்தின் முற்போக்கு பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் கல்வி கொள்கை அமைய, தேசியக் கொள்கை - 2020 இல் உள்ள மாணவர் விரோத அம்சங்களை வெளிப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.