tamilnadu

img

தமிழகத்தில் சத்தமின்றி  அமலாகும் அவசர நிலை!

தமிழகத்தில் தொடர்ந்து கருத்து கூறும் உரிமை கூட பறிக்கப்பட்டு; அறிவிக்கப்படாத அவசர நிலையை அமலாக்கும் பணி நடைபெறுவதாக அரசியல் ஆய்வாளர்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரண்ட்லைன் இதழின் சிறப்பு வெளியீடான ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்,’ தி இந்து தமிழ் திசையின் வெளியீடுகளான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ , மாபெரும் தமிழ்க் கனவு’ ஆகிய நூல்களின் அறிமுக கூட்டம்  ழ புத்தககூடு சார்பில் ஆரணியில் செப்டம்பர் 8 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரம் அரங்கில் நடைபெற இருந்த அந்த  கூட்டத்தில் பத்திரிகையாளர் ஆழி. செந்தில் நாதன், பொருளாதார நிபுணர் ஜெ. ஜெயரஞ்சன் ஆகியோர் சிறப்புரையாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் திடீரென  கூட்ட அரங்கின் உரிமையாளர் காரணம் எதுவும் சொல்லாமல் அரங்கைத் தர மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து  குப்புசாமி கணேசன் தனது முகநூல் பதிவில் இக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சனியன்று  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய கல்விக்கொள்கை சாதிக்க உதவுமா? சவாலாக மாறுமா? என்ற தலைப்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர்  மறைமுகமாக பாஜகவிற்கு எதிர்நிலை கொண்ட பேச்சாளர்களை மாற்ற வேண்டும் என நெருக்கடி கொடுத்து வந்தனர். அதில் இழுபறி நீடித்தது. பின்னர் எதிர்நிலை கொண்ட பேச்சாளர்களில் ஒருவரை மாற்றி அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களையும் மாற்ற வேண்டும் என காவல்துறையினர் நிர்பந்தம் செய்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் கோவை மிகவும் பதட்டமான பகுதி என்பதுதான். இதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் கோவையில் இருந்து காங்கேயம் சேரன் கல்லூரியில் நடைபெறும் என்று மாற்றி அறிவித்தனர். இத்தனை சமரங்களுக்கு பின்னரும் நிகழ்ச்சி நடைபெறும் அன்று திடீரென காவல்துறை அனுமதி இல்லை அறிவித்தது. இதையடுத்து வேறு வழியின்றி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
இதேபோல் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப்பிரசுரம் கூட விநியோகிக்க கூடாது என்று அடக்குமுறைகள் ஏவப்படுகிறது. இது  அரசின் கொள்கைகளை விமர்சிக்கவோ, மாற்று கருத்து கூறவோ கூடாது என மறைமுகமாக மிரட்டும் செயலாகும். சுருக்கமாக சொல்வது என்றால் தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அறிவிக்கப்படாத அவசர நிலையை அமலாக்கி வருகிறது என முகநூலில் அரசியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.