tamilnadu

img

பணிநிரந்தரம் கோரி 6 மையங்களில் எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாநிலை....

சென்னை:
பணிநிரந்தரம் கோரி திங்களன்று (ஜன.11) தமிழகம் முழுவதும் 6 மையங்களில் எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (எம்ஆர்பி) நடத்திய தேர்வு வாயிலாக 13 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் 2 வருடங்களில் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று நியமன ஆணையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 ஆயிரம் பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.தற்போது வரை 11 ஆயிரம் பேர் தொடர்ந்து 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றுகின்றனர். இந்த எம்ஆர்பி செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அமல்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை, ஈரோடு ஆகிய 6 மையங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.வாசுகி தொடங்கி வைத்தார்.கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின், இணைச் செயலாளர் அஷ்வினி கிரேஸ் ெஜபபிரியா உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு பேசினார்.