tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மாவீரர்கள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் நினைவு தினம்...

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் 1948 முதல் 51 வரை தடை செய்யப்பட்டது.இந்த அடக்குமுறை காலத்தில் ஏராளமான இளைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தீரமுடன் போராடினர். சாம்பவானோடை  சிவராமன், இரணியன் ஆகியோர் மலேயாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர்கள்.50 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கும் அதிகமாகவைத்திருந்த நெடும்பலம் சாமியப்பமுதலி யாருக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்குத் தலைமையேற்ற சிவராமன், தலைமறைவாக இருந்து விவசாயிகளை அணிதிரட்டினார். இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டம் நாட்டுச்சாலை கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி சிவராமன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தனது சொந்த ஊரான வாட்டாகுடியில் இரணியன் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கினார். அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய மதுக்கூர், பாப்பா நாடு, அத்திவெட்டி ஜமீன்களின் கொடுமைகளை எதிர்த்து மக்களைஅணிதிரட்டியவர் இரணியன். நாடிமுத்துப் பிள்ளைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை எஸ்டேட்டில் பணியாற்றிய விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். அவர்களையும் இரணியன் அணிதிரட்டினார். தோழர் கே.பி.நடராஜன் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்ட இரணியன், செம்பாலூர் பண்ணைக்கெதிரான போராட்டத்தை ஆம்பலாபட்டு, கரம்பயம், எட்டுப் புலிக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளையும் இணைத்துத் தலைமையேற்று நடத்தினார். அதனால், இரணியன் அந்தப் பகுதி நில வுடைமையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதனால், போலீசாரால் தேடப்பட்டுவந்த இரணியன் ஒரத்தநாடு வட்டம் வடசேரியில் கயவன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

1943ல் ஆம்பலாபட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரேசன்தலைமையில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞரான ஆறுமுகம் தன்னையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். ஆம்பலாபட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்குச் சொந்தமான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடினார். விவசாயிகளை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிராமிசேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர் ஆறுமுகம்.வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணியனும், ஆறுமுகமும் சந்தித்த போது, துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆறுமுகமும், இரணியனும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1950 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து, மறுநாள் பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.

====பெரணமல்லூர் சேகரன்====